நாட்டின் வர்த்தக பற்றாக்குறை வரலாறு காணாத அதிகரிப்பு

3 years ago 970

புதுடில்லி:நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.69 லட்சம் கோடி ரூபாயாக, கடந்த செப்டம்பரில் உயர்ந்துள்ளது. இது, இதுவரை இல்லாத உயர்வாகும். இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த 2012 அக்டோபரில் 1.52 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 22.63 சதவீதம் அதிகரித்து, 2.54 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முக்கியமான துறைகளில் ஏற்றுமதி செயல்பாடு சிறப்பாக இருந்தது இதற்கு காரணமாக அமைந்தது. ஏற்றுமதி அதிகரித்ததை போலவே இறக்குமதியும் மதிப்பீட்டு காலத்தில் அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் இறக்குமதி 84.77 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 4.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இம்மாதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தது முக்கிய காரணமாகும்.இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.69 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதுவரை இல்லாத அளவாகும். இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த 2012 அக்டோபரில், 1.52 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இப்போது அதையும் தாண்டி, 1.69 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.தங்கத்தின் இறக்குமதி கடந்த செப்டம்பரில் 38 ஆயிரத்து 325 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பரில் இதுவே 4,508 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதியை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 57.53 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டுள்ளது. ஏற்றுமதி அதிகரித்து வருகின்ற போதிலும், கூடவே வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருவது குறித்து கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Read Entire Article