ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் மீண்டும் உறுப்பினரானது இந்தியா

3 years ago 846

நியூயார்க்;ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகி உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கான 18 உறுப்பினர்களை தேர்வு செய்ய மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். நேற்று முன்தினம் ஐ.நா., பொதுச் சபையில் மனித உரிமைகள் கவுன்சில் தேர்தல் நடந்தது.மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக தேர்வாக, பொதுச் சபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளில் 97 நாடுகளின் ஆதரவு தேவை.எனினும், இந்தியாவுக்கு பெரும்பான்மைக்கும் அதிகமாக 184 உறுப்பு நாடுகளின் ஆதரவு கிடைத்தது. இதன் வாயிலாக தொடர்ந்து ஆறாவது முறையாக மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜன., முதல், 2024ம் ஆண்டு டிச., வரை இந்தியா இந்த பதவியில் நீடிக்க உள்ளது.இது குறித்து, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் திருமூர்த்தி கூறியதாவது:மனித உரிமைகள் கவுன்சில் தேர்தலில், இந்தியாவுக்கு பேராதரவு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அரசியலமைப்பில் உள்ள ஜனநாயகம், பன்முகத்தன்மை, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பின்பற்றும் நமக்கு கிடைத்த அங்கீகாரம் இது. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து ஐ.நா., உறுப்பு நாடுகளுக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவுடன் அர்ஜென்டினா, பெனின், கேமரூன், எரிட்ரியா, பின்லாந்து, காம்பியா, கஜகஸ்தான், லித்துவானியா, மலேஷியா, பராகுவே, கத்தார், சோமாலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளும் உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளன.

Advertisement

Read Entire Article