விஜயதசமியன்று கோவில்கள் திறப்பு இப்பதாங்க நிம்மதி!கண்ணீர் மல்க வழிபட்ட பக்தர்கள்

3 years ago 773

கோவை:விசேஷ நாட்கள் மற்றும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவில்களை திறக்க அரசு அனுமதியளித்ததால், விஜயதசமியான நேற்று பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்து பரவசமடைந்தனர். சில பக்தர்கள் கண்ணீர் மல்க சுவாமி கும்பிட்டனர்.
பக்தர்கள் தங்கள் பிரச்னைகளை இறக்கி வைத்து, மனதுக்கு ஆசுவாசம் தேடும் ஒரே இடம் வழிபாட்டுத்தலங்கள்தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், பொருளாதார பாதிப்பு, உறவுகளுக்குள் விரிசல் என பல்வேறு பிரச்னைகளால் தவித்து வந்த பொதுமக்கள், கோவில்கள் திறக்கப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
தமிழக அரசு, கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விசேஷ நாட்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவில் நடை திறக்க தடை விதித்தது. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மனமுடைந்தனர்.இச்சூழலில், கடந்த வாரம் கோவில்களை திறக்க வலியுறுத்தி, பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பத்து நாட்களுக்குள் கோவில்கள் திறக்கப்படாவிட்டால், தமிழகம் முழுக்க போராட்டங்கள் விஸ்வரூபமடையும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்கவும், விழாக்களையும் உற்சவங்களையும் எப்போதும் போல் நடத்தவும், அரசு அனுமதியளித்தது. இதையடுத்து விஜயதசமி நாளான நேற்று, கோவில்கள் திறக்கப்பட்டன. வித்யாரம்பம் நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டன.
மருதமலை சுப்ரமணிய சுவாமி, பெரியகடைவீதி கோனியம்மன், அவிநாசி சாலை தண்டுமாரியம்மன், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், கோட்டை சங்கமேஸ்வரர், ஆர்.எஸ்.புரம், காமாட்சியம்மன் மற்றும் அன்னபூர்னேஸ்வரி, சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல முக்கிய கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அப்போது அவர்களது கண்களில் கண்ணீர் ததும்பியது. இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி உளமுருக பிரார்த்தனை செய்தனர்.சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் சிலர் கூறுகையில், 'நிம்மதி தேடி அலைபவர்களுக்கு, கோவிலில் சுவாமி தரிசனம்தான் மன நிம்மதி தரும். கடவுளிடம் பிரச்னைகளை இறக்கி வைப்பதால், பிரச்னையே தீர்ந்து விடுவது போன்ற மகிழ்ச்சி கிடைக்கும்; மனம் லேசாகும்.ஆனால் கொரோனாவால் சுவாமிக்கும், பக்தர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. அந்த இடைவெளி, தற்போதைய உத்தரவால் மறைந்து விட்டது. இனி எப்போதும் போல், இறைவனிடம் மனதார வழிபாடு செய்வோம்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Advertisement

Read Entire Article