முறையான நிறுவனத்தில் மட்டுமே முதலீடு : உஷார்... சட்ட விழிப்புணர்வில் நீதிபதி வலியுறுத்தல்

3 years ago 341

திருப்பூர்:பதிவு பெற்ற, பாதுகாப்பான நிறுவனங்களில் மட்டுமே முதலீடு மற்றும் சேமிப்பு செய்ய வேண்டும் என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி பேசினார்.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் விஜயா வரவேற்றார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பாலமுருகன், பேனல் வக்கீல் அழகர் சரவணன் முன்னிலை வகித்தனர். மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முனியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், திருப்பூர் விரைவு கோர்ட் நீதிபதி ராமநாதன் தலைமை வகித்து, பேசியதாவது: திருப்பூரை பொறுத்தவரை, தொழில், வேலை வாய்ப்பு, வர்த்தகம் என பல வகையிலும் பல தரப்பினர் நல்ல முறையில் வருவாய் ஈட்டுகின்றனர்.
தொழில் துறையினரோ, தொழிலாளர்களோ தாங்கள் முறையாக பெரும் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பது மிக அவசியம்.இது குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயம். சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காக அணுகும் நிதி நிறுவனங்கள், முறையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். உரிய வரவு செலவு கணக்கு தாக்கல் செய்து, அரசு வழிகாட்டுதல் படி செயல்படும் நிறுவனங்களா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் வெளிப்படைத்தன்மையும், பாதுகாப்பும் உறுதியாகும். அங்கீகாரமில்லாத நிதி நிறுவனங்கள், தனி நபர்களிடம் முதலீடு செய்வது நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாகும். உரிய விழிப்புணர்வு இது குறித்து மக்களுக்கு ஏற்பட வேண்டும்.நீதித்துறை இதுபோன்ற விழிப்புணர்வுக்காக, மக்கள் மத்தியில் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.இவ்வாறு, நீதிபதி பேசினார்.

Advertisement

Read Entire Article