முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

3 years ago 786

புதுடில்லி:முன்னாள் பிரதமர் இந்திரா, போர் காலத்திலும் நாட்டை முன்னின்று வழி நடத்திச் சென்றதாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழ்ந்துள்ளார்.

டில்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் கருத்தரங்கம் நடந்தது. இதில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது: கல்வி, அறிவுக்கு சரஸ்வதியும், பாதுகாப்பு, வலிமை, அழிப்பு, போர் ஆகியவற்றுக்கு துர்கா லட்சுமி கடவுள்களும் உள்ளனர். அக்கறையும், அரவணைப்பும் பெண்களிடம் காலங்காலமாக காணப்படும் தனிக் குணம். நம் கலாசாரத்தில் பெண்ணியம் பின்னிப் பிணைந்துள்ளது.

நம் நாட்டைக் காக்க பெண்கள் ஆயுதம் ஏந்திப் போருக்கு சென்றுள்ளனர். அவர்களில் ராணி லட்சுமி பாய் வீரம் செறிந்த வரலாற்று சிறப்புடையவர்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா பல ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் வங்கதேச போர் காலத்திலும் நாட்டை முன்னின்று வழி நடத்தினார்.

சமீபத்தில் இந்தியாவின் ஜனாதிபதியாக, முப்படைகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பித்தவர், பிரதீபா பாட்டீல். அதுபோல இந்திய ராணுவத்தில் பெண்களை அனுமதித்துள்ள வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அடுத்த ஆண்டு முதல் தேசிய ராணுவ அகாடமியின் முப்படை பயிற்சி மையத்திலும் பெண்கள் பயிற்சி பெறத் துவங்குவர். இதனால் வருங்காலத்தில் இந்திய படைகளுக்கு பெண் ராணுவ தளபதிகள் பொறுப்பேற்பர்.

இந்திய ராணுவத்தில் பெண் போலீஸ் பிரிவு ஏற்படுத்தியிருப்பது முக்கிய மைல் கல் சாதனை. கடந்த ஆண்டு முதல் கடற்படை போர் கப்பல்களிலும் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விமானப் படையின் அனைத்து பிரிவுகளிலும் பெண்களின் பங்களிப்பு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

சீலா குகை வாசல் திறப்பு

அருணாச்சல பிரதேசத்தில் 13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் உள்ள சீலா கணவாய் வழியே தவாங் மற்றும் மேற்கு கவங் மாவட்டங்களை இணைக்கும் குகைப் பாதைப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் இறுதிக் கட்டமாக, மலை வாயில் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இறுதிக் கட்ட பணிகளை துவக்கி வைத்தார். அத்துடன், எல்லை சாலைகள் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்த, 20 ஆயிரம் கி.மீ., மோட்டார் சைக்கிள் பயணத்தையும் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Advertisement

Read Entire Article