மன்மோகன் சிங் உடல்நிலை நேரில் விசாரித்த அமைச்சர்

3 years ago 821

புதுடில்லி : டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அங்கு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 89, கடந்த சில நாட்களாக, உடல்நலப் பிரச்னைகளால் அவதியுற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.காய்ச்சல் சரியான போதும் நேற்று முன்தினம் மாலை அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடல் பலவீனமடைந்தது; உணவு உண்ண முடியாமல் திரவ உணவை மட்டுமே அவர் எடுத்து வந்தார்.

இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான இதய நோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து நேற்று மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது' என்றார்.

இதற்கிடையே மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மன்சுக் மாண்டவியா, நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டிக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவாக நலம் பெற விழைகிறேன்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Read Entire Article