ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய 10 சுவாரஸ்யங்கள் – பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

3 years ago 1090

AR-Rahman-is-celebrating-his-55th-birthday-today-Here-are-10-interesting-facts-about-him

'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான் இன்று (ஜனவரி 6) தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஹ்மானைப் பற்றிய 10 சுவாரஸ்யத் தகவல்கள் இங்கே..

1. சென்னையில் 1966 ஜனவரி 6ஆம் தேதி பிறந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இயற்பெயர் திலீப் குமார். தனது 23-வது வயதில் இஸ்லாம் மதத்தைத் தழுவி ரஹ்மானாக மாறினார். அல்லா ரக்கா ரஹ்மான் என்பதன் சுருக்கமே ஏ.ஆர்.ரஹ்மான் என்று அறியப்படுகிறது.

2. ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் மலையாள திரையுலகில் மூத்த இசையமைப்பாளர் ஆவார். 9 வயதில் தந்தை மரணமடைய நிலைகுலைந்தது அவரின் குடும்பம். இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து, அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தியது ரஹ்மான் குடும்பம்.

image

3. ரஹ்மானின் சுயசரிதை ‘Notes of a Dream’ என்ற பெயரில் புத்தகமாகி உள்ளது. அந்நூலில், தனது இளமைக்கால வாழ்க்கை க‌ஷ்டம் நிறைந்ததாக இருந்தது என்றும் தந்தையின் மரணம் வாழ்க்கையை வெறுமையாக்கியது எனவும் 25-வது வயது வரை தனக்குள் தற்கொலை எண்ணங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ரஹ்மான்.

4. ஆரம்ப காலங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய ரஹ்மான், பின்னர் விளம்பரப் படங்களுக்கு ‘டியூன்’ போட்டுக் கொண்டிருந்தார். அதன்பிறகே இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ‘ரோஜா’ படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். 'ரோஜா' படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ‘ஹிட்’ ஆனது. அதுவரை இல்லாத அளவுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான கேசட்டுகள் விற்றுத் தீர்ந்தன. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதன் பின் தமிழ், மலையாளம், இந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து, பெரும் புகழ் பெற்றார்.

image

5. 'ஸ்லம்டாக் மில்லியினர்' திரைப்படத்திற்கு மிகச்சிறந்த இசையமைத்ததற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டது. இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருதினை தன்னுடைய இரண்டு கைகளாலும் உயர்த்திப் பிடித்து 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார்.

6. ரோஜாவுக்கு கிடைத்த தேசிய விருது முதல், இதுவரை ரஹ்மான் பெற்ற விருதுகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. 6 தேசிய விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், பாப்தா, கிராமி விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் எண்ணற்ற விருதுகளையும் பெற்ற இசையமைப்பாளராக விளங்குகிறார் ரஹ்மான்.

7. ரஹ்மானின் இசையில் உருவான ‘வந்தே மாதரம்’ பாடல் ஆல்பம் இந்தியர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. நாடி நரம்புகளில் நாட்டுப்பற்று முறுக்கேற்ற அதிகம் விரும்பி கேட்கப்பட்ட பாடலாக திகழ்ந்தது அது. கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட சமயத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து கலைஞர் கருணாநிதி எழுதிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.

image

8. திரையுலகில் 27 வருடங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான், முதன்முதலாக வெள்ளித்திரையில் முகம் காட்டியது என்றால் அது விஜய் நடிப்பில் வெளியான `பிகில்' படத்தில்தான். ‘சிங்கப் பெண்ணே’ பாடலில் விஜய், ரஹ்மான், அட்லி மூவரும் தோன்றினர்.

9.பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பவர் ரஹ்மான். 'அமைதியான சூழ்நிலை எனக்கு பிடிக்கிறது. இரவு நேரத்தில்தான் அது கிடைக்கிறது. அதனாலேயே இசையமைக்கும் பணியை இரவு நேரங்களில் மேற்கொள்கிறேன்' என்று தனது சுயசரிதை நூலில் கூறியுள்ளார் ரஹ்மான்.

10. ஏ ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு. இத்தம்பதியினருக்கு அமீன் என்ற மகனும், கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் அமீன் தற்போது இசைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ரஹ்மானுக்கும் அமீனுக்கும் ஒரே தேதியில்தான் பிறந்த நாள்.

Read Entire Article