ஆட்சியைக் கவிழ்க்க முயற்சியா? தாக்கரேவுக்கு பட்னவிஸ் பதிலடி!

3 years ago 874

நாக்பூர்:பா.ஜ.,வை விமர்சித்து, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ள கருத்துகளுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

நியாயமற்ற வழி

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்து உள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.,வைக் கடுமையாக விமர்சித்து, முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

இது குறித்து தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளதாவது:கடந்த 2019 சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சட்டசபையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பா.ஜ., 105லும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. ஆனால், முதல்வர் பதவி கேட்டு, கூட்டணியை முறித்தார் உத்தவ் தாக்கரே.

மக்களால் நிராகரிக்கப்பட்ட தேசியவாத காங்., மற்றும் காங்., உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளார்.தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக, நியாயமற்ற வழியில் அவர் செயல்பட்டுள்ளார்.மாநிலத்தில் சிவசேனா ஆட்சியை அமைக்கும் என, தன் தந்தை பால் தாக்கரேவுக்கு உறுதி அளித்ததாக அவர் கூறிஉள்ளார். அப்படி என்றால் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருக்காவது முதல்வர் பதவியை வழங்கியிருக்கலாமே.

மத்திய அரசு அமைப்புகளான, சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்வதாக அவர் கூறியுள்ளார். அந்த அமைப்புகளின் நிர்வாகத்தில் மத்திய அரசோ, பா.ஜ.,வோ தலையிடுவதில்லை. அப்படி தலையிட நினைத்தால் மஹாராஷ்டிரா அமைச்சர்கள் அனைவரும் சிறையில் இருப்பர்.

மஹாராஷ்டிரா வரலாற்றில் மிகப் பெரிய ஊழல் அரசாக இந்த கூட்டணி அரசு அமைந்துள்ளது. பணம் பறித்தல், கொள்ளையடிப்பதை தங்கள் குறிக்கோளாக வைத்து செயல்படுகின்றனர். தற்போது மாநிலத்தில் தரகர்களின் கை ஓங்கியுள்ளது. எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்பதற்கான புதிய மென்பொருளை, மஹாராஷ்டிரா அமைச்சர்கள் உருவாக்கி உள்ளனரோ என்ற சந்தேகம் உள்ளது.

பிரச்னைகளுக்கு தீர்வு

தவறு செய்வோர் தான், சி.பி.ஐ., அமலாக்கத் துறையைப் பார்த்து பயப்பட வேண்டும். தன் ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., முயற்சிப்பதாக தொடர்ந்து உத்தவ் தாக்கரே கூறி வருகிறார். அது போன்ற எந்த விருப்பமும் பா.ஜ.,வுக்கு கிடையாது. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Read Entire Article