அன்பே சிவம் : ஜீ தமிழில் புதிய தொடர்

3 years ago 830

அனைத்து அம்சங்களும் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தமது நேயர்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கி வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி. சர்வதேச தரத்தில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான சர்வைவர், விறுவிறுப்பான தொடர்களான நினைத்தாலே இனிக்கும், கோகுலத்தில் சீதை, புதுப்புது அர்த்தங்கள், சத்யா, செம்பருத்தி மற்றும் நீதானே என் பொன் வசந்தம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நேயர்களின் மனம் கவர்ந்த ஜீ தமிழ், அவர்களை மேலும் குதூகலமூட்டும் வண்ணம் அன்பே சிவம் என்கிற புத்தம் புதிய தொடரைத் ஒளிபரப்பவுள்ளது.

அன்பை பிரதானப்படுத்தும் இந்த தொடர் இதுவரை ஒளிபரப்பான தொடர்களில் இருந்து வித்தியாசமான கதையை கொண்டது. கணவன், மனைவியுமான அன்பு செல்வியும், சிவமும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களின் இரு குழந்தைகளும், இருவரிடமும் மாறி மாறி உடனிருக்கிறார்கள்.

குழந்தைகளின் அன்பு பெற்றவர்களை எப்படி சேர்த்து வைக்கிறது என்பது தான் கதை. இதில் அன்பு செல்வியாக ரஷ ஹோல்லாவும், சிவமாக விக்ரம்ஸ்ரீயும் நடிக்கிறார்கள். நாளை மறுநாள் (18ம் தேதி) முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தமிழக நேயர்களுக்காக நல்லசிவம் கதாப்பாத்திரத்தில் நடிப்பதில் மிகுந்த ஆவலாக இருப்பதாக கூறிய விக்ரம் ஸ்ரீ, "நல்லசிவம், தனது பொறுப்புகள் மற்றும் ஆசைகளுக்கு இடையில் மாட்டித் தவிக்கும் ஒரு சுவாரஸ்யமான கதாப்பாத்திரமாகும். அது அனைவரும் புரிந்துகொள்ள கூடிய ஒரு கதாபாத்திரமாகும். நேயர்களால் அந்த கதாபாத்திரத்தின் பன்முகத்தன்மையை எளிதில் உணர முடியும். இந்த தொடரின் நாயகனாக நடிப்பது குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும், ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகவுள்ள இந்த புதிய தொடரை எனது ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள் என்றும் நான் நம்புகிறேன்” என்றார்.

ரக்ஷா ஹோல்லா கூறுகையில், "அன்புச்செல்வியாக நிஜவாழ்க்கைக்கு ஏற்றவாறு தத்ரூபமாக நடிப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. வெளியுலகிற்கு மிக திடமான மற்றும் அடக்கமான பெண்ணாக தெரிந்தாலும், உண்மையில் அவள் உள்ளுக்குள் நொறுங்கி போயிருப்பவள். ஒரு அம்மாவாக, மனைவியாக, தொழிலதிபராக மற்றும் மகளாக அனைத்து கதாபாத்திரங்களையும் பொறுப்புணர்வோடு வெளிப்படுத்துவது என்பது சவாலாகவே இருந்தது. எனினும், இந்த கதாபாத்திரத்துக்கு எனது சிறந்த பங்களிப்பினை அளிக்க எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இத்தகைய தனித்துவம் வாய்ந்த திரைக்கதையில் ஒரு அங்கமாக இருப்பதிலும் பார்வையாளர்களுக்கு அறிவூட்டுவத்திலும் மகிழ்ச்சியடைகிறேன்", என்றார்.

Read Entire Article