அந்த படங்களை பரப்ப வேண்டாம் - ஜாக்குலின் வேண்டுகோள்

3 years ago 951

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக புகார்கள் உள்ளன.

இதற்கிடையில், 200 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்ததாக சுகேஷ் மீது டில்லி பொருளாதார குற்றவியல் போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக், ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷும் காதலித்து வந்தனர் என கூறியிருந்தார். இதை ஜாக்குலின் வழக்கறிஞர் மறுத்திருந்தார். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் படுக்கையறையில் முத்தம் கொடுக்கும் செல்பி புகைப்படம் வெளியாகி இந்தி திரையுலகில் வைரலானது.

ஜாக்குலினும் சுகேஷும் நான்கு முறை சென்னையில் சந்தித்துள்ளனர். இதற்காக தனி விமானத்தை சுகேஷ், அவருக்கு ஏற்பாடு செய்ததாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையை சார்ந்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் பாலிவுட் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர்.இந்நிலையில் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் இன்னும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இவற்றுக்கு விளக்கம் தரும் வகையில் ஜாக்குலின் ஒரு பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'நாடும், நாட்டு மக்களும் எனக்கு அதிகப்படியான அன்பையும், மரியாதையையும் கொடுத்திருக்கின்றனர். நான் இப்போது கடினமான பாதையை கடந்து கொண்டிருக்கிறேன். இதை எனது நண்பர்களும், ரசிகர்களும் அறிவார்கள் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் எனது தனியுரிமை மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இதை நீங்கள் செய்ய மாட்டீர்கள். எனக்கும் இதை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீதி வெல்லும் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டு கையெடுத்து கும்பிடுவது போன்ற படத்தையும் வைத்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகரும் தனக்கு ஜாக்குலினுடன் நெருங்கிய நட்பு இருந்தது என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஜாக்குலினிடம் பல முறை விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரை வெளிநாடு செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். ஜாக்குலின் தாயார் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரைக்கூட சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Read Entire Article